மொட்டை மாடியில் 6 மாணவர்களுக்குப் பாடம் நடத்த ஆரம்பித்த பள்ளிக்கூட ஆசிரியர்களின் மகன் பைஜூ ரவீந்திரன்
சொத்து மதிப்பு ரூ. 37,00,000,00,000...! (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)

தன் வீட்டின் கார் ஷெட்டில் ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் ஆரம்பித்து வெற்றி வாகை சூடியது நீங்கள் அறிந்ததே. அதேபோல பெங்களூருவில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஆறு பேருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த பைஜூ ரவீந்திரன் இன்று இந்தியாவின் முதல் 50 கோடீஸ்வரர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். இவருடைய நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு ரூபாய் 37 ஆயிரம் கோடிகள். 2011- இல் துவங்கி, எட்டு ஆண்டுகளில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது..

"நான் லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமென்று என்றைக்கும் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக லட்ச மனங்களில் சிந்தனை மற்றும் கற்றலை புகுத்தவே விரும்புகிறேன்" --இதுவே பைஜூ  ரவீந்திரன் அடிக்கடி சொல்லும் தாரக மந்திரம். 

நமக்கெல்லாம் அல்ஜீப்ரா என்றால் அடிவயிற்றில் பேதியாகும், ஆனால் பைஜூ ரவீந்திரனோ அசால்ட்டாக அல்ஜீப்ராவை ராப் பாடலாகப் பாடி அசத்தி வருகிறார்.. கணிதத்தில் அந்த அளவுக்குத் தேர்ச்சி மற்றும் விருப்பம்!

கேரள மாநிலத்தின் கன்னூர் மாவட்டத்திலுள்ள அழிகொடே என்னும் கிராமத்தில் 1980- இல் பிறந்து வளர்ந்தவர் பைஜூ ரவீந்திரன். பெற்றோர் ஆசிரியர்களாக இருந்ததால் இவருக்கும் ஆசிரியர் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனினும் பள்ளிப் பருவத்தில் வலைப்பந்து மற்றும் கால்பந்து விளையாடி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார். பின்னர் பெற்றோர்கள் 'இப்படியே பொழுதைக் கழிக்காதே' என்று அறிவுறுத்த, கிராமத்திலிருந்த பள்ளியில் ஆரம்பக்கல்வியை மலையாள மொழியில் கற்றார் ரவீந்திரன். பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பட்டம் பெற்று, வெளிநாடுகளில் வேலை கிடைக்க, அங்கு சென்றார். லட்சங்களில் கை நிறைய சம்பளம்.

2004-ஆம் ஆண்டு விடுமுறைக்காக ஊர் திரும்பியவர், சில நாட்கள் தன் விளையாட்டு நண்பர்களோடு பொழுதைப் போக்கி வந்துள்ளார்.பல  நண்பர்கள் அப்போது கேட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ரவீந்திரன் கணக்குப் பாடத்தில் வல்லவர் அல்லவா?  எனவே அவரிடம் தங்களுடைய சந்தேகங்களை நண்பர்கள் கேட்க, அவரும் உதவியிருக்கிறார்.அந்த ஆண்டு நடைபெற்ற கேட் தேர்வை ரவீந்திரனும் சேர்ந்து எழுத, நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றார். 

இந்நிலையில் விடுமுறை முடிய, வேலைக்காக மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் ஓராண்டுக்குப் பிறகு அடுத்த விடுமுறைக்காக ஊர் வந்தபோது, மீண்டும் விளையாட்டாகக் கேட் தேர்வு எழுதினார். அதிலும் நூற்றுக்கு நூறு.அவரோடு சேர்ந்து பயின்ற நண்பர்களும் நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தனர்.

'உன் புத்திசாலித்தனத்திற்கு  நீ வேலை செய்ய வேண்டியது வெளிநாட்டில் இல்லை; இந்தியாவில்தான்' என்று நண்பர்கள் நம்பிக்கை ஊட்ட, தொழில்முனைவோராக களத்தில் இறங்க முடிவெடுத்தார் பைஜூ ரவீந்திரன்.

பெங்களூருவில் இருந்த தன்னுடைய நண்பன் வீட்டின் மொட்டை மாடியில் போட்டித்தேர்வுகள் எழுத விரும்பிய ஆறு மாணவர்களுக்கு முதன்முதலில் பயிற்சி கொடுத்தார் ரவீந்திரன். அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெற்றனர். இதன் மூலம் ரவீந்திரனின் பயிற்றுவிக்கும் திறன் எங்கும் ஓகோவெனப் பேசப்பட்டது.

பயிற்சிப் பட்டறை குறித்து கேள்விப்பட்ட ஏராளமான மாணவர்கள் அவரிடம் பயிற்சிக்காக சேர ஆரம்பித்தனர். நண்பன் வீட்டு மொட்டை மாடியில் இருந்து வகுப்பறைக்கு மாறி, அங்கும் இடம்பற்றாததால், ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தியுள்ளார் ரவீந்திரன். வார இறுதி நாட்களில் அருகிலுள்ள நகரங்களுக்கும் சென்று கற்பிக்கும் அளவிற்கு ரவீந்திரன் மிகப் பிரபலமானார். அவரது பயிற்சி நுணுக்கங்களும், பயிற்சி தரும் முறையும் இதர ஆசிரியர்களிடமிருந்து மாறுபட்டு இருக்க, அது இந்தியா முழுவதும் இருந்த போட்டித் தேர்வர்களைக் கவர்ந்தது. அதன் விளைவாக மும்பை, டெல்லி, புனே, சென்னை, பெங்களூரு என விமானம் மூலமாக பல நகரங்களுக்கும் பறந்து சென்று பயிற்சி கொடுக்கும் சிறந்த ஆசிரியரானார் ரவீந்திரன்.

2009-ஆம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நோட்டமிட்ட ரவீந்திரன், அதை தனக்கான களமாக மாற்றி கொள்ளும் முயற்சியில் இறங்கினார். போட்டித்தேர்வுக்கான பாடங்களை எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான முறையில் பதிவு செய்து, வீடியோவாக்கி அதை இணையத்தில் இடம் பெறச் செய்தார். அதை இந்தியாவில் 46-க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்த மாணவர்கள் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் வெற்றியைக் குவித்தனர்.

பைஜூ ரவீந்திரனின் அணுகுமுறையே, சிந்தித்து, அதன் பின்பு எதையும் கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான். இதை அடிப்படையாக வைத்தே திங்க் அண்டு லேர்ன் (Think & Learn) என்னும் அமைப்பையும் உருவாக்கினார். அதன் மூலம் ஆன்லைனில் பாடங்களை கற்பிக்கத் தொடங்கினார். மிக எளிய முறை விளக்கங்களுடன் கூடிய இந்த பைஜூ செயலியை தொடங்கிய நான்கு ஆண்டுகளிலேயே சுமார் 3.5 கோடி பேர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அவற்றில் சுமார் 24 லட்சம் பேர்களிடம் இருந்து ஆண்டுக்கட்டணமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ .12 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. இதுவே இந்த அமைப்பை கடந்த 2018-2019-ஆம் ஆண்டின் லாபகரமான தொழிலாக மாற்றியது என்று சொல்லலாம்.

பொதுவாகவே பாடம் நடத்துபோது நமக்கு அதில் சுத்தமாக ஈடுபாடு இல்லாவிட்டால், தூக்கம் கண்களைச் சொக்கவைக்கும். இதை மாற்ற குழந்தைகளின் கவனத்தைக் கவரும் வகையில் பாடம் நடத்த வேண்டும். நாம் அவர்களோடு கலந்துவிடவேண்டும் அல்லது அவர்களை ஈர்க்கும் வகையில் நம்முடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பொதுவாகச் சொல்வதுண்டு. பைஜூ ரவீந்திரனின் அணுகுமுறையும் அதேதான். குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாடத்தினை  மாற்றுவதன் மூலம் குழந்தைகளுக்குப் பாடத்தின் மீது உற்சாகத்தையும் ஆழ்ந்த கவனத்தையும் கொண்டு வர முடியும் என்று உறுதியாக நம்பினார்.

திங்க் அண்டு லேர்ன் அமைப்பு கொடுத்த தன்னம்பிக்கையும் வெற்றியும் இணைந்து ரவீந்திரனை 2015-ஆம் ஆண்டில் பைஜூ'ஸ் (Byju's) என்ற செயலியைத் தொடங்க வைத்தது என்று சொல்லலாம். பைஜூ செயலியின் மூலம் எல்கேஜி வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டங்களுக்கு மிக எளிதான முறையில் செயல்முறை விளக்கம் போன்றவற்றைக் கற்றுத் தர ஆரம்பித்தார். கூடவே உயர் கல்வி மாணவர்களுக்கும் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பாடத்திட்டங்களையும் அதன் செயல்முறை விளக்கங்களையும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். இதற்கு பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

பைஜூ செயலிதான் தற்போது இந்தியாவில் கல்வி சார்ந்த மிக முக்கியமான ஸ்டார்ட் அப் ஆகும். கற்றலைக் காதலிப்போம்  என்பதுதான் பைஜூவின் தாரக மந்திரம். ரவீந்திரனின் பைஜூ செயலியில் டிஸ்னியின் கதாபாத்திரங்களான லயன் கிங் கதையில் வரும் சிம்பா என்னும் குட்டி சிங்கமும், ஃப்ரோஸன்  கதையில் வரும் அன்னா என்ற சுட்டிப் பெண்ணும் சேர்ந்து தான் 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்தை கற்றுத் தருகின்றன. இந்த இரண்டு அனிமெஷன் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் தான் விளையாட்டுக்களோடு கதைகளையும் சேர்த்தே சொல்கின்றன. அத்தோடு வினாடி வினா நிகழ்ச்சிகளையும் கூட நடத்துகின்றன.

சிம்பா மற்றும் அன்னா கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துள்ளதால் இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் பாடத்திட்டத்தின் எல்லா இடங்களிலும் பெரிதும் பயன்படுத்துகிறோம் என்று கூறுகிறார் ரவீந்திரன். இதன் காரணமாகவே சமீபத்தில் இந்நிறுவனத்திற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கூடுதலாகத் கிடைத்துள்ளது. இன்றைய தேதியில் பைஜூ செயலியின் மதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல, சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். கடந்த ஏழு வருடத்தில் நம்பவே முடியாக வளர்ச்சியாகும் இது. இதற்கு முக்கிய காரணம் இணையதள கல்வியில் அவர் மேற்கொண்ட முயற்சிதான்.

பைஜூ செயலி இணையதளத்தில் ரவீந்திரனுக்கு சுமார் 21 சதவிகித பங்குகளும், இவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சுமார் 33 சதவிகித பங்குகளும் உள்ளது. ஒரு சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சியை எட்டி, இன்றைக்கு நாட்டின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் 50 பேர்களில் ஒருவராகத் தன்னை இணைத்துக் கொண்டதற்கு இவரின் அசாத்திய திறமையோடு கூடிய உழைப்பே காரணம். எந்தச் செயலையும் ஈடுபாட்டுடன் செய்தால் அதில் வெற்றி நிச்சயம் என்பதற்கு பைஜூ ரவீந்திரன் நல்ல உதாரணம். இவருடைய ஈடுபாட்டுடன் கூடிய எளிமையான கற்பித்தல் முறைதான் அனைத்து மாணவர்களுக்கும் பைஜூ செயலி பிடித்துப்போனதற்கு முக்கிய காரணமாகும்.

பைஜூ செயலி கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அறிந்து முகநூல் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் கடந்த 2016-ஆம் ஆண்டில் தன்னுடைய அறக்கட்டளையின் சார்பாக சுமார் 332 கோடி ரூபாய் நிதியுதவு அளித்துள்ளார். வரும் காலத்தில் இது நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று உணர்ந்தே நிதியுதவி அளித்திருக்கிறார். எந்த முயற்சி எடுத்தாலும் அதை இந்தியாவில் இருந்தே தொடங்கவேண்டும் என்று மார்க் ஸூக்கர்பெர்க் உறுதியாக நம்பியதால் தான் நிதியுதவியை பைஜூவிற்கு அளித்துள்ளார். மேலும் மார்க் ஸூக்கர்பெர்க்கின் பவுண்டேசன் மூலம் நிதியுதவி பெறும் முதல் ஆசிய நிறுவனமும் பைஜூ தான்.

அவரின் இன்றைய வளர்ச்சிக்கு சின்னதொரு உதாரணம். இந்திய கிரிக்கெட் அணியினர் அணியும் ஜெர்சிக்கு பைஜூதான் விளம்பரதாரர். பைஜூவுடன் போட்டியிட்டு தோற்று ஓடியது ஓப்போ நிறுவனம். தற்போது பைஜூ செயலி நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பள்ளிப்பாடத் திட்டத்திற்கு ஏற்ற வகையில் பைஜூ செயலி சேவையை வழங்கியது!