சென்னை,--தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையவர்கள், 33.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அப்போது, மாந்தோப்பு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் இத்திட்டம் செல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடைய 33.20 லட்சம் பேரில் 26 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கின்றனர். இதற்காக, அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத் துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து, சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உள்ளன. இதுதொடர்பாக பள்ளி கல்வி, உயர்கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நான்கு லட்சம் பொறியியல் மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 46 சதவீதம் பேர் முதல் தவணையும், 12 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போட்டுள்ளனர். இரண்டாம் தவணை செலுத்தாத மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது