திருச்சி:''நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும்,'' என, அமைச்சர் மகேஷ் கூறினார்.

திருச்சியில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் நேற்று கூறியதாவது:தமிழகம் முழுதும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்தியது போல், பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்த வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா காலகட்டத்தில் பணியின் போது ஆசிரியர்கள் உயிர் இழந்திருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது பற்றி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.மாணவ - மாணவியரை பள்ளிக்கு வரவழைப்பது தான் ஆசிரியர்களின் பணி. அவர்களிடம் பாகுபாடு காட்டி துன்புறுத்தக் கூடாது.

மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பதன் அவசியம் பற்றியும், அவர்களை வரவழைப்பது பற்றியும் தான் விவாதித்தோம். நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.