சென்னை-ஊழல், 'போக்சோ' குற்றச்சாட்டுகளுக்காக 'சஸ்பெண்ட்' செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு, பிழைப்பூதியம் வழங்கத் தடை விதிக்கும் வகையில், சட்டத் திருத்தம் மேற்கொள்ள, மாநில தகவல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.

பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களில், எத்தனை பேர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை அளிக்கக் கோரி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பெரியசாமி என்பவர் விண்ணப்பித்தார்.பள்ளி, கல்லுாரி, பல்கலை ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எதிரான பாலியல் புகார்களின் விபரங்களை கேட்டு, முருகேஷ் என்பவர் விண்ணப்பித்தார்.

முறையான பதில் வராததால், மாநில தகவல் ஆணையத்தில் இருவரும் முறையீடு செய்தனர்.இவர்களின் முறையீட்டை விசாரித்த, மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு:ஊழல் குற்றச்சாட்டில்42 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக, பேரூராட்சித் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாலியல் குற்றங்களுக்காக 232 ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.போக்சோ, ஊழல் வழக்குகளில் அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். அந்த நாட்களில், அவர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கப்படுகிறது. துறை நடவடிக்கையும், குற்ற வழக்கு விசாரணையும் நடக்கிறது.சஸ்பெண்ட் காலத்தில்,பணிபுரியாமல் ஊதியம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.துறை விசாரணை, நீதிமன்ற விசாரணையில் தாமதம் ஏற்படுவதால், பணிபுரியாமல் இவர்கள்ஊதியம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, ஊழல், போக்சோ வழக்குகளில் குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை, துறை ரீதியிலான விசாரணையை நிறுத்தி வைக்க ஏதுவாக, பணி விதிகளில் திருத்தம் ஏற்படுத்த, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.ஊழல் மற்றும் போக்சோ குற்றச்சாட்டுக்களும் சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களுக்கு, பிழைப்பூதியம் வழங்குவதில் விலக்கு அளிக்க ஏதுவாக, அதற்குரிய விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.