மதுரை:துறை ரீதியிலான பணிகளுடன் கூடுதலாக சிறப்பு தடுப்பூசி முகாம்களில் பங்கேற்கும் அரசு ஊழியர்களை மருந்து காலியான பின்தான், கிராமங்களில் இருந்து புறப்பட வேண்டும் என வலியுறுத்துவதால் அவர்கள் அவதிக்குஉள்ளாகின்றனர்.


தொடர்ந்து விடுமுறையின்றி ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம்களை நடத்துவதால் அரசு ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. காலை 7:00 - இரவு 7:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடப்பதாக அரசு அறிவித்தாலும் தடுப்பூசி முழுதும் செலுத்திய பின் தான் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் இருந்து புறப்பட வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலர் செல்வம் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணிகளில் மற்ற மாநிலங்கள் பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. அரசு ஊழியர்கள் முழுமையாக தங்களை தடுப்பூசி பணிகளில் ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். ஆனால் தடுப்பூசி முகாம்களில் பணி மேற்கொள்வோருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும்.

மருத்துவம்,பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு அடிக்கடி ஆய்வு கூட்டம் நடத்தப்படுவதால் விடுப்புகள் எடுக்க முடியவில்லை. சிறப்பு முகாமிற்கு மறுநாள் விடுப்பு அனுமதித்து அன்று ஆய்வு கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். உரிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் தடுப்பூசி முகாம் நடத்த குறிப்பிட்ட ஒரு துறை நிர்ப்பந்தப் படுத்தப் படுகிறது. இதை தவிர்த்து நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஞாயிறு தவிர்த்து வார நாட்களில் தடுப்பூசி முகாம்களை நடத்துவதை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.