சென்னை-இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' சார்ந்த பாடப் பிரிவுகள் மற்றும் இ.சி.இ., உள்ளிட்ட படிப்புகளுக்கு, மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:இந்த ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 65க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகள் உள்ளன. அவற்றில், 80க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன.தற்போதைய நிலையில் மாணவர்கள் மத்தியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளில் சேர, அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.கம்ப்யூட்டர் சயின்ஸில் 10 வகை படிப்புகள் உள்ளன.'கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிசினஸ் சிஸ்டம், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் டிசைன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி. 'கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஐ.ஓ.டி., சைபர் செக்யூரிட்டி மற்றும் பிளாக் செயின்' என பல்வேறு பிரிவுகள் உள்ளன.இந்த படிப்புகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை ஆகிய வற்றில் இருந்து கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில், பெரிய நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ என பல ஐ.டி., நிறுவனங்கள், 40 ஆயிரம், 50 ஆயிரம் பேர் என வேலைக்கு ஆட்களை எடுக்க உள்ளனர்.


அதனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.மெக்கானிக்கல், சிவில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்கும் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். மெக்கானிக்கல், சிவில் போன்ற மற்ற பாடங்களுக்கும், அதே முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்கள், தங்கள் பாடப் பிரிவு மட்டு மின்றி, கணினி சார்ந்த திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும். தொழில் துறைக்கு தேவையான கூடுதல் திறன்களை கொண்டவர்களுக்கு, அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.கடந்த, 2016ம் ஆண்டில் சிவில் பாடப் பிரிவில் 10 ஆயிரத்து 88 மாணவர்கள் சேர்ந்தனர்.கடந்த ஆண்டில் 3,974 பேர் மட்டுமே சேர்ந்தனர். மெக்கானிக்கல் பாடத்தில் 2016ம் ஆண்டில், 21 ஆயிரத்து 137 பேர் சேர்ந்தனர்; கடந்த ஆண்டில் 8,179 பேர் சேர்ந்தனர்.அதேபோல், மெக்கானிக்கல், சிவில் பாட பிரிவுகளை, பல கல்லுாரிகள் குறைத்துள்ளன. ஆனால், படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறையவில்லை.இந்த ஆண்டு, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ், டேட்டா சயின்ஸ் உள்ளிட்டவற்றில், அதிக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.மேலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிசினஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் இ.சி.இ., பிரிவுக்கும் அதிக மவுசு காணப்படுகிறது.

கூடுதல் திறன் கட்டாயம்

அதேநேரம், மெக்கானிக்கல், சிவில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறையவில்லை. மெக்கானிக்கல், சிவில் மாணவர்கள், தங்கள் துறையில் மட்டுமின்றி, 'டிஜிட்டல்' வழியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் திறனையும், பயிற்சியையும் சேர்த்து கொள்ள வேண்டும்.முன்பெல்லாம் பாடப் பிரிவுகளை பார்த்து, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது மாணவர்களின் திறன்களை பார்த்து, பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.அதனால், பல கல்லுாரிகள், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.ஒவ்வொரு மாணவரும் தனக்கென ஒரு, 'பிராண்ட் வேல்யூ'வை உருவாக்கி கொள்ள வேண்டும்.'விஷூவல் வீடியோ' எதிர்காலத்தில் எல்லா பணிகளுக்கும், 'டிஜிட்டல்' வழி நடவடிக்கைகள் முக்கியமாகி விடும். மாணவர்கள் வேலைக்கு செல்லும் போது, தங்களின் விண்ணப்பத்தை கூட, இனி வீடியோ மற்றும் டிஜிட்டல் வடிவில் வழங்க வேண்டிய நிலை உள்ளது.


படிக்கும் போது மேற்கொண்ட திட்ட பயிற்சிகளின் வீடியோக்களை, தங்களின் வேலைவாய்ப்பு விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, மாணவர்களுக்கு கல்லுாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.எந்த கல்லுாரியில் பாடங்களை தாண்டி, மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு ஏற்ப கற்று தருகின்றனரோ, அந்த கல்லுாரிகளை, மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.'சாய்ஸ் பில்லிங்'கில் கவனம்கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:தற்போதைய நிலையில், இன்ஜினியரிங் சேரும் மாணவர்கள், கவுன்சிலிங்கில் விருப்பமான பாடம் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்வதற்கு, 'சாய்ஸ் பில்லிங் 'பகுதியில், கவனமுடன் செயல்பட வேண்டும். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் அதிக மாணவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டில் முதல் சுற்றில், 12 ஆயிரத்து, 263 பேர் அழைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு, 14 ஆயிரத்து 788 பேர் பங்கேற்கின்றனர். இரண்டாம் சுற்றில் 22 ஆயிரத்து 903 பேர் கடந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு 30 ஆயிரத்து 439 பேர் பங்கேற்கின்றனர். எனவே, போட்டி அதிகம் உள்ளதால், அதிகமான கல்லுாரிகள் மற்றும் பாடங்களை சாய்ஸாக கொடுத்தால் தான், ஓரளவுக்கு நினைத்த கல்லுாரி கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, சாய்ஸ் குறிப்பிடுவதில் கவனமுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சான்றிதழ் பயிற்சி முக்கியம்பட்டப்படிப்பை தாண்டி சான்றிதழ் படிப்புகள் முக்கியம். திறன் பயிற்சி மற்றும் பல்வேறு நிறுவன சிறிய படிப்புகளை முடித்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.உதாரணமாக, 'கூகுள்' சான்றிதழ் படிப்பு, 'அமேஸான் ப்யூச்சர் ரெடி புரோகிராம்' மற்றும் 'மைக்ரோசாப்ட்' சான்றிதழ் படிப்புகள் போன்றவற்றை, பலரும் ஆர்வமாக படிக்கின்றனர்.அதேபோல், கூடுதலாக ஒரு வெளிநாட்டு மொழியை தெரிந்து கொள்ள வேண்டும். ஜப்பானிஸ் மற்றும் ஜெர்மன் மொழிகளை படித்தால், அங்குள்ள வேலைவாய்ப்புகளை பெறலாம்.