சென்னை எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாட புத்தகங்களின் வினியோகம் தாமதமாகி உள்ளது. இதனால், வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ தேர்வு முறை மற்றும் சமச்சீர் கல்வி திட்டம் அமலில் உள்ளது. முதல் மூன்று மாதங்களுக்கு, முதல் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும்.அதன்பின், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடம் நடத்தப்படும். ஜன., முதல் மார்ச் வரை மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்படும்.

இந்த ஆண்டு முதல் பருவத்துக்கான புத்தகங்கள் வழங்கி, பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் மற்றும் முதல் பருவ தேர்வுகள் முடிந்து விடுமுறையும் முடிந்துள்ளது.பள்ளிகளில் 18ம் தேதி முதல், இரண்டாம் பருவ பாடங்களை நடத்த வேண்டும். இரண்டாம் பருவ பாடங்களை முடிக்க, இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

இந்நிலையில், இரண்டாம் பருவ பாட புத்தக வினியோகத்தை, பள்ளி கல்வித் துறை இன்னும் துவங்காமல் தாமதம் செய்துள்ளது.ஏற்கனவே, கொரோனா கட்டுப்பாடுகளால், பள்ளிகளில் வகுப்புகள் நடத்தும் நேரமும், நாளும் குறைந்துள்ள நிலையில், பள்ளிக் கல்வியின் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு உரிய காலத்தில் வகுப்புகள் எடுக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் பாட புத்தக வினியோகத்தை துவக்க வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.