சென்னை- --நீதிமன்ற வழக்குகளால், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை யில் பணியாற்றும் 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது இடமாறுதல் வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்தது. இந்நிலையில், இடமாறு தல் விதிகளை எதிர்த்து, ஆசிரியர் பயிற்றுனர்கள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் தொடர்ந்தனர். இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்த உத்தரவை பின்பற்றி, இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்; அனைத்து விண்ணப்பங்களையும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.இந்நிலையில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு நடக்க விருந்த இடமாறுதல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனரக பணியாளர் பிரிவு இணை இயக்குனர் பொன்னையா, சி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளிக் கல்வியின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், வட்டார வள மையங்கள், மாவட்ட, வட்டார திட்ட அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்று னர்களில் 500 பேருக்கு, 15ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.


இதையடுத்து, மற்ற ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது இடமாறுதல் கவுன்சிலிங் இன்று நடத்துவதாக இருந்தது. பல்வேறு நிர்வாக காரணங்களால் பொது இடமாறுதல் கவுன்சிலிங் தள்ளி வைக்கப்படுகிறது. கவுன்சிலிங் நடத்தும் நாள், நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளின் உத்தரவுகளை பின்பற்றுவதில், நிர்வாக ரீதியாக பல்வேறு சிரமங்கள் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.