கரூர்: ''கரூர் அருகே விடுமுறையில் இருந்த ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் போதிய பாதுகாப்புடன் பள்ளி தொடர்ந்து செயல்படுகிறது,'' என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தெரிவித்தார்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, உப்பிடமங்கலம் அடுத்த, பொரணி அரசு மேல்நிலைப்பள்ளி உயிரியல் ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பணியாற்றும் பள்ளி செயல்பட்டு வருவது குறித்து கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தெரிவித்ததாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கொரோனா தொற்றிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காக்க, அரசு அறிவித்த அனைத்து வழிகாட்டு விதிமுறைகள் பள்ளிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மேலும், பள்ளி ஆசிரியை, கொரோனா தொற்று பாதிக்கப்படும் போது அவர் பள்ளிக்கு வரவில்லை, விடுமுறையில் இருந்தார்.வீட்டிலிருக்கும் போது தான், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கு விடுமுறை அளிக்க தேவையில்லை. ஏனென்றால், வெப்பமானி பரிசோதனை, கை கழுவ சானிட்டரி ஆகியவைகள் கொண்டு நாள்தோறும் மாணவர்களை பள்ளிக்கல்வித்துறை மூலம் பரிசோதித்து வருகிறோம். அரசின் வழிகாட்டுதலின் கீழ் கரூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் கீழ் அனைத்து பணிகளையும் கரூர் மாவட்ட பள்ளிகல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.