புதுடில்லி: 'நீட்' தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று (செப்., 6) தள்ளுபடி செய்ததையடுத்து, திட்டமிட்டபடி செப்.,12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தெரிய வந்துள்ளது.இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு (நீட் 2021) வரும் செப்., 12ம் தேதி நடத்தப்படும் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூலை 13ம் தேதி தொடங்கி ஆக.,14ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் செப்., 12ம் தேதியே நடைபெறுவதால், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு சிலர் கேட்கிறார்கள் என்பதற்காக, 16 லட்சம் பேர் எழுதும் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க இயலாது எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டு உள்ளனர். இதனால், திட்டமிட்டபடி செப்., 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தெரிய வந்துள்ளது.