மதுரை:''சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு பேரூராட்சி பணியாளர் சங்க மாநில தலைவர் பிச்சைமுத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கொரோனா நோய் தொற்று மற்றும் பேரிடர் காலங்களில் அரசு பணியாளர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்தனர். அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகின்றனர். தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.,ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.தேர்தல் வாக்குறுதியையும் வெளியிட்டார்.

ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. ஒப்படைப்பு விடுப்பு சம்பளம், கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு, ஊக்கத்தொகை, தினக்கூலி மற்றும் மதிப்பூதிய பணியாளர்களுக்கு கால முறை சம்பளம் வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் அரசு அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.

மக்கள் தொகை, வருமானத்தின் அடிப்படையில் தகுதியான கிராம ஊராட்சிகளை பேரூராட்சி களாக தரம் உயர்த்திட வேண்டும். பேரூராட்சி குடிநீர் திட்ட பணியாளர்கள், மின் பணி உதவியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்திட வேண்டும். இந்த கூட்டத்தொடரில் இதுகுறித்து முதல்வர் அறிவிக்க வேண்டும், என்றார்.