சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, விருப்ப கல்லுாரி பதிவு ஆன்லைனில் இன்று துவங்குகிறது.தமிழகத்தில் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, உயர்கல்வி துறை சார்பில் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு 440 கல்லுாரிகளில், 1.52 லட்சம் இன்ஜினியரிங் இடங்களுக்கு, 1.39 லட்சம் பேர் விண்ணப்பித்து, தரவரிசை பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, 15 ஆயிரத்து 660 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு, 11 ஆயிரத்து, 390 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.அரசு பள்ளி மாணவர்களின் தரவரிசை பட்டியலில் இடம் பெறாத மாணவர்களுக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் மீண்டும் தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்று திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டுக்கு, கவுன்சிலிங் இன்று துவங்க உள்ளது.நேற்று மாலை வரை கவுன்சிலிங் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது.மாணவர்கள் இன்றும், நாளையும், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை, ஆன்லைனில் பதிவு செய்யலாம். நாளை மறுநாள் உத்தேச ஒதுக்கீடு வழங்கப்படும்.விபரங்களை இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கான, www.tneaonline.orgஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.-'டாப்' மாணவர்களுக்குசிறப்பு கவுரவம்இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசையில், டாப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு முன்பே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அரசு பள்ளி மாணவர்கள், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ள, 50க்கும் மேற்பட்ட மாணவர்களை, அதிகாரிகளே வீடியோ அழைப்பில் பேசி, விருப்பகல்லுாரிகள் மற்றும் பாடங்களை ஒதுக்கீடு செய்து உள்ளனர்.இதற்கான உத்தரவை, அண்ணா பல்கலையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். 'டாப்பர்ஸ்' மாணவர்களுக்கு, அதிகாரிகளே தனியாக ஒதுக்கீடு வழங்கி, சிறப்பு கவுரவம் அளிப்பது இதுவே முதல் முறை.