சென்னை : தமிழகத்தில் இந்த முறை, இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் 1.51 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 1.39 லட்சம் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. தர வரிசை பட்டியல் நேற்று வெளியான நிலையில், மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன் கவுன்சிலிங்' இன்று துவங்குகிறது.

சென்னை அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை 26ல் துவங்கி ஆகஸ்ட் 24ல் முடிந்தது. ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 பேர் விண்ணப்பம் பதிவு செய்தனர். அவர்களில் 1.45 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர்.அவர்களில் 1.42 லட்சம் பேர் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றினர்; 2,722 பேர் சான்றிதழ்களை பதிவேற்ற வில்லை.

இதையடுத்து சான்றிதழ்சரிபார்ப்பு முடிந்து, 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தர வரிசை பட்டியல், நேற்று காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த விபரங்களை, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டியின் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

52 ஆயிரம் மாணவியர்

* சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்களில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்; 3,290 பேர் பல்வேறு காரணங்களால் தகுதி பெறவில்லை

* விண்ணப்பித்தோரில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 973 பேர் பொது பிரிவிலும்; 2,060 பேர் தொழிற்கல்வியிலும் தகுதி பெற்றுள்ளனர்

* கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்றவர்களில், 87 ஆயிரத்து 291 பேர் மாணவர்கள்; 51 ஆயிரத்து 730 பேர் மாணவியர்; 12 பேர் மூன்றாம் பாலினத்தவர்

* விளையாட்டு பிரிவில் 1,190; முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் 1,124; மாற்றுத் திறனாளிகளில், பார்வை திறன் குறைந்தவர்கள் 19; காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டோர் 29; உடல் ரீதியான பாதிப்புள்ளோர் 123; மன இறுக்கத்தால் கற்கும் திறன் குறைந்தவர்கள் ஐந்து பேர் மற்றும் பல்வேறு திறன் குறைந்தோர் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர்.

இன்று முதல் கவுன்சிலிங்

தர வரிசை பட்டியலில் உள்ளவர்களுக்கு இன்று முதல் கவுன்சிலிங் துவங்குகிறது. முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. சிறப்பு பிரிவினருக்கான இந்த கவுன்சிலிங் 24ம் தேதி முடிகிறது.

* பொது பிரிவு கவுன்சிலிங் 27ல் துவங்கி அக்., 17ல் முடிகிறது. தொழிற்கல்வி கவுன்சிலிங் 27ல் துவங்கி அக்., 5ல் முடிகிறது. இதையடுத்து, அக்., 19 முதல் 23 வரை துணை கவுன்சிலிங் நடக்கிறது

* அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் காலியாகும் இடங்களை, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கும் கவுன்சிலிங் 24ல் துவங்கி 25ம் தேதி முடிகிறது. கவுன்சிலிங் முழுதும் ஆன்லைன் வழி விருப்பப் பதிவு மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்யும் முறையில் நடத்தப்படுகிறது.அரசு பள்ளி ஒதுக்கீடு

* அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 15 ஆயிரத்து 660 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, 11 ஆயிரத்து 390 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. மற்றவர்கள் பொது பிரிவு கவுன்சிலிங் வழியே இடங்களை பெற்றுக் கொள்ளலாம்

* இந்த கவுன்சிலிங்கில், 440 கல்லுாரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. தற்போதைய விண்ணப்பதாரர்கள் அடிப்படையில் 12 ஆயிரத்து 737 இடங்கள் காலியாகும் நிலை உள்ளது.

* கவுன்சிலிங் தொடர்பாக பிரச்னைகள், சந்தேகங்கள் குறித்து, மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள இன்ஜினியரிங் கவுன்சிலிங் உதவி மையத்தை அணுகலாம்.மேலும், www.tneaonline.org என்ற இணையதளம், care@tneaonline.org என்ற, 'இ- - மெயில்' மற்றும் 0462 -- 2912081, 044 - 2235 1014, 044 -- 2235 1015 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

டாப் - 10 பட்டியலில் கர்நாடக மாணவர்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் 'டாப் - 10' பட்டியலில் கர்நாடகாவில் வசிக்கும் மாணவர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண்ணில் மொத்தம் 13 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தனியார் மெட்ரிக் சி.பி.எஸ்.இ. மற்றும் பிற மாநில பாட திட்ட மாணவர்கள்.

திருச்சி நித்யஸ்ரீ, சாரதிவாசன், சேலம் சர்வஜித் விசாகன், ஆரணி ஸ்ரீநிதி, திருநெல்வேலி விக்னேஷ், புதுக்கோட்டை உமா ஸ்வேதா, ஊட்டி சுபஸ்ரீ, சென்னை அத்திப்பட்டு ஹேமந்த், கோவை அஸ்வந்த் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.கர்நாடக மாணவரான பெங்களூரு சஞ்சய்குமாரும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழக அரசின் விதிகளின் படி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழக மாணவர்கள் மட்டுமே பங்கேற்க தகுதி உள்ளது. ஆனால் கர்நாடகா முகவரியை கொண்ட மாணவர் எப்படி டாப் - 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் கூறுகையில் 'மாணவர் சஞ்சய்குமார் கர்நாடகாவின் ஹலசூரு என்ற ஊரில் வசித்து வருகிறார். அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் கர்நாடகாவில் வசித்து அங்கேயே படித்தாலும் அவருக்கு தமிழக கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.