சென்னை : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை திறப்பு குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம் இன்று(செப்.,15) அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

கருத்து கேட்பு

இது தொடர்பாக, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்கின்றன. கன்னியாகுமரி யில் 87 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர். குறைந்தபட்ச மாக கோவையில் 67 சதவீத மாணவர்கள் வருகின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகளை துவங்கலாமா என்று கருத்து கேட்டுள்ளோம். அவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். 'பள்ளிகளை திறக்கலாம்; மாணவர்களுக்கு பெரிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை' என, உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சாமிநாதனும் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளை திறந்தால், பெற்றோர் விருப்பப்படி மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பலாம் அல்லது 'யு டியூப்' மற்றும் கல்வி 'டிவி'யில் ஒளிபரப்பாகும் பாடங்கள் வழியே, அவர்களை படிக்க வைக்கலாம்.

அறிக்கை தாக்கல்

பள்ளிகள் திறப்பு குறித்து, முதல்வரிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். முதல்வர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பார்.ஒன்பது முதல் பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்த பின், கொரோனா பரிசோதனை நடத்தியதில், 83 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய கிளஸ்டர் முறையில் பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் அச்சம் எழவில்லை.'நீட்' தேர்வு மாணவர்களுக்கும், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் உளவியல் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.