மதுரை : தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 82 சதவீதம் வினாக்கள் இடம் பெற்றுள்ளதால் இந்தாண்டு நீட் நுழைவு தேர்வு தமிழக மாணவர்களுக்கு சாதகமாக அமையும் என கல்வியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதன் எதிரொலியாக இத்தேர்வு மீதான நம்பிக்கை மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் இத்தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என்ற அரசியல் கட்சிகளின் தவறான வாக்குறுதிகளை நம்பி மாணவர்கள் பலர் இந்தாண்டு மனரீதியாக இத்தேர்வுக்கு தயாராக முடியாமல் போனதை காண முடிந்தது.அதேநேரம் கட்சிகளின் எதிர்ப்பு பிரசாரத்தை தாண்டி, நீட் தேர்வு மீது மாணவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், இந்தாண்டு தேர்வில் மாநில பாடத்திட்டப்பகுதிகளில் இருந்து 82 சதவீதம் வினாக்கள் இடம் பெற்றிருந்தது தான்.

தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில், 163 வினாக்கள் மாநில பாடத் திட்டத்தின் பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் கடினம் என ஒருசில மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்பகுதியில் கேட்கப்பட்டிருந்த 50 வினாக்களில் 48 மாநில பாடத்திட்டத்தில் உள்ளன என நீட் நுழைவுதேர்வு வினாத்தாள்குறித்து பகுப்பாய்வு செய்த கல்வி அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: 2019ல் 1,017 பேர் இத்தேர்வை தமிழ் மொழியில் எழுதினர். 2020ல் 17,101 பேர் எழுதியுள்ளனர். 17 மடங்கு அதிகரித்துள்ளது. தேர்ச்சி விகிதமும் 2019 ல் 48.57 சதவீதத்தில் இருந்து 2020ல் 57.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தாண்டு தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வரும் காலங்களில் இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, என்றனர்.