தமிழகத்தில் கரோனா தொற்று பரவலின் 2-வது அலையால் நடப்பாண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம்ஏற்பட்டது. கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதள வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் தொற்றின் பரவல் குறைந்துள்ளதால், 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் நேற்று முன்தினம் (செப்.1) திறக்கப்பட்டன.
நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களின் வருகைப்பதிவு 80 சதவீதம் வரை இருப்பது பள்ளிக்கல்வித் துறைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி வளாகங்களில் உடல் வெப்ப பரி சோதனை, முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி பயன்பாடு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. மாணவர்களின் வருகைப் பதிவு முதல்நாளில் 77 சதவீதமாகவும், 2-ம் நாளில் 82 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது, 60 முதல் 70 சதவீத மாணவர்களே வந்தனர். அந்நிலை மாறி தற்போது மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகின்றனர். ஓரிரு நாட்களில் இந்த எண்ணிக்கை இயல்பை (90%) எட்டிவிடும். நீண்டகாலமாக நேரடி வகுப்புகள் இல்லாத சூழலில் மாணவர்களின் கற்றலில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்காக ‘பிரிட்ஜ்கோர்ஸ்’ கையேடு தயாரித்துபள்ளிகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது.
கற்றல் இடைவெளியை தகர்த்து, மாணவர்களை மனரீதியாக தயார்படுத்தும் வகையில் 45 நாட்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’பாடங்கள் மட்டுமே நடத்தப்படும்.பள்ளி பாதுகாப்பு பணிகளையும்இயக்குநர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். பள்ளிக்கல்வியில் 95 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்களில் பலர் மருத்துவக் காரணங்களால் தடுப்பூசி போட முடியாத சூழல் உள்ளது. அவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளோம்.
பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்குச் சென்று அழைத்துவரும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அடுத்தக் கட்டமாக நடுநிலைப் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். இந்த விவகாரம் குறித்து சுகாதாரத் துறை யுடன் ஆலோசனை செய்து இறுதி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
0 Comments
Post a Comment