திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளித் திறப்பின் போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

பள்ளிகளிலும் மாஸ்க், சானிடைசர் போன்றவை வைத்திருக்க வேண்டும். ஒரு பெஞ்சில் இரு மாணவர்கள் மட்டுமே அமர வைக்க வேண்டும். ஆசிரியர்கள் இரு தவணை தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதை விட பள்ளிகள் மாணவர்கள் வருவது கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் பள்ளி திறக்கப்பட்ட 3ஆவது நாளே நாமக்கல் மாவட்டத்தில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு கடந்த 1-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.


இதையடுத்து பள்ளியில் இருந்த அந்த மாணவி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வகுப்பறை பூட்டுபோட்டு போட்டப்பட்டது. பின்னர் பள்ளிக்கு வந்திருந்த 224 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


இதனிடையே பரமத்தியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் பிளஸ்-2 படித்து வந்த 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 2 மாணவிகளையும் சுகாதாரத்துறையினர் உடனடியாக தனிமைபடுத்தினர். பள்ளியில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மற்ற மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பேராவூரணி தனியார் பள்ளி மாணவிக்கும், திருப்புவனம் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூரிலும் பள்ளி மாணவருக்கு கொரோனா ஏற்பட்டது. இந்த நிலையில் திருவாரூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


4 பேர் ஏற வேண்டிய காரில் லக்கேஜுடன் வந்த 6 பேர்.. ஏற்ற மறுத்த கால் டாக்சி டிரைவர் மீது தாக்குதல்


அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி, நீடாமங்கலம் முன்னவாள் கோட்டை அரசு பள்ளி மாணவர், வலங்கைமான் அரியத்துவாரமங்கலம் அரசு பள்ளி மாணவி, திருத்துறைப்பண்டி தலைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து 4 மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.