ரூ.35 லட்சம் பேரம்: தேர்வறையில் இருந்து Whatsapp மூலம் லீக்கான நீட் வினாத்தாள் - ஜெய்பூரில் நடந்தது என்ன?இந்தியாவில் கடந்த 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களிலும் குரல் எழுந்து வருகிறது. மேலும் இந்த தேர்வு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கிறது என கல்வியாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.


மேலும் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது என்றும் அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறனர். ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று நடைபெற்ற நீட் தேர்வின் போது ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஜெய்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வு தொடங்கியதும் தேர்வறை கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர், வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பேருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளனர்.


அந்த நபர்கள் சிகார் பகுதியில் வேறு சிலருக்கு வினாத்தாளை அனுப்பி, அவர்கள் மூலம் சரியான விடைகளைப் பெற்றுள்ளனர். அங்கிருந்து முகேஷுக்கு விடைகள் கிடைக்க, அதனை வாட்ஸ்-அப் மூலம் பெற்ற ராம் சிங் தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளைத் தெரிவித்துள்ளார். இதற்காக ரூ. 35 லட்சம் பேரம் பேசப்பட்டு, தேர்வுமைய வளாகத்திலேயே 10 லட்ச ரூபாய் கைமாறியுள்ளது.


இதையடுத்து தேர்வு மைய அதிகாரி, மாணவி உட்பட 8 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.