சென்னை: தமிழகத்தில் மொத்தம் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் அரசு கலைக் கல்லூரிகளில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு கலை கல்லூரிகளில் உள்ள சுமார் 85 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களுக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 547 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், கிராமப்புறங்களில் இருந்தும் நகராட்சியில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவ, மாணவிகள் அதிகளவு விண்ணப்பித்தனர்.


தனியார் கல்லலூரிகளில் அதிகளவு கட்டணம் செலுத்தி கல்வி பயில இயலாத காரணத்தால், அரசு கல்லுாரிகளுக்கு விண்ணப்பித்தனர். இதன் காரணமாக, 2021-22ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 25% மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வேண்டும் என அரசுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் கோரிக்கை விடுத்தார். மேலும் அரசு கலைக் கல்லூரிகளில் 25% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்தநிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அரசாணை: கல்லூரி கல்வி இயக்குனரின் கோரிக்கையை பரிசீலித்து, 2021-22ம் கல்வியாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கலை பாடப்பிரிவில் 25% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு, கல்லூரிகள் சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2020-2021ம் கல்வியாண்டில் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அந்தந்த கல்லூரிகள், கலை பாடப்பிரிவுகளுக்கு 20% கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வ வசதிக்கு ஏற்ப 20% கூடுதலாகவும் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.