ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 13 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள் ளன. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்: அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே திமுக அரசு நல்லுறவை பேணி பாதுகாக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக முதல்வரின் தற்போதைய அறிவிப்புகள் அமைந்துள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள் ளது.

தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ச.மயில்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு போல் தமிழக அரசும் 2021-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன்: அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி அறிவிப்பையும், சத்துணவு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 வயதாக உயர்த்தியதையும் வரவேற்கிறோம். அதேபோல, மத்திய அரசு உயர்த்தி வழங்கிய அகவிலைப்படியைப் போலவே, நிலுவைத் தொகையுடன் தமிழக அரசும் வழங்கவேண்டும்.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் தலைவர் ரா.சண் முகராஜன்: அகவிலைப்படி உயர்வு, கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 13 முக்கியகோரிக்கைகளை நுண்ணிய அளவில் கவனித்து நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு தலைமைச் செயலகசங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி: கடுமையான நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியர்களுக்கு தாயுள்ளதோடும், பரிவோடும் அகவிலைப்படியை முன்கூட்டியே, அதாவது 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட்: அகவிலைப்படி உயர்வு, 2016 முதல் 2018 வரை போராட்டத்தில் ஈடுபட்டஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடல், போராட்டக்காலம் பணிக்காலமாகக் கருதப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங் களின் பிரதிநிதிகள் முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரி வித்து வருகின்றனர்.