அரசு கல்லுாரிகளில் இன்று முதல், மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. சேர்க்கைக்கு முன், மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்குமாறு, கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்லுாரிகள் வழியே நடத்தப்படுகிறது. முன்னதாக கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், ஆன்லைனில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது.மொத்தமுள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு படிப்பில் சேர, 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடந்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியானது.

இன்று முதல், அந்தந்த கல்லுாரிகளில் கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது.மாணவர்களை சேர்ப்பதற்கு முன், அவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் உண்மை தன்மையை, அரசு தேர்வுத் துறை வழியே சரிபார்க்க வேண்டும். மேலும், அசல் சான்றிதழ்களையும் சரிபார்த்த பின், சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை படிப்புஇதற்கிடையில், கல்லுாரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல், www.tngasapg.org, www.tngasapg.in என்ற இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். வரும் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு கல்லுாரிக்கு பதிவு கட்டணமாக 2 ரூபாயும், விண்ணப்ப கட்டணமாக 58 ரூபாயும் செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், பதிவு கட்டணம் மட்டும், 2 ரூபாய் செலுத்த வேண்டும்.கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு, 044- - 2826 0098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.