சென்னை-- 'கல்வி கட்டண பாக்கி காரணமாக, 'ஆன்லைன்' வகுப்பில் இருந்து மாணவர்களை விலக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு இயக்குனரகம் எச்சரித்து உள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்புக்காக, ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், முந்தைய கல்வி ஆண்டிலும், நடப்பு கல்வி ஆண்டின் முதல் பருவத்திலும் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள், ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக பெற்றோர் தரப்பில் புகார் எழுந்தது.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கட்டண பாக்கியை காரணம் காட்டி, எந்த மாணவரையும், ஆன்லைன் வகுப்பில் இருந்தும் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டால், நேரடி வகுப்பு களில் இருந்தும் விலக்கக் கூடாது.மேலும், தேர்வுகள் எழுத அனுமதிக்காமல் இருப்பது, தேர்வு முடிவை நிறுத்தி வைப்பது போன்ற புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.