சென்னை--அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுக்கு, நாளை கடைசி நாள்.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் சட்டக் கல்லுாரிகள் உள்ளிட்டவற்றில் சேருவதற்கான பணிகள் துவங்கி உள்ளன.

தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, அந்தந்த கல்லுாரிகளின் சார்பில், தனித்தனியே ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, அரசின் இணையதளம் வழியே ஒருங்கிணைந்த ஆன்லைன் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

மாநிலம் முழுதும் மொத்தம், 143 அரசு கல்லுாரிகளுக்கான விண்ணப்ப பதிவு, ஜூலை 26ல் துவங்கியது. நேற்று முன்தினம் வரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். விண்ணப்ப பதிவுக்கு நாளை கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், விரைந்து விண்ணப்பிக்கும்படி, உயர்கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.