புதுடில்லி-வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், செப்., 30ல் இருந்து மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'நிதியாண்டு 2020 - 21க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, அடுத்த மாதம் 30ம் தேதி கடைசி நாள்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை, மத்திய அரசு ஜூனில் அறிமுகம் செய்தது. இந்த புதிய இணையதளத்தில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. 'வரி செலுத்துவோர், தொழில்நுட்ப கோளாறுகள், தடைகள் இன்றி எளிதாக கணக்கு தாக்கல் செய்ய, இந்த புதிய இணையதளம் வழிவகுக்கும்' என, அறிவிக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறுஆனால், இந்த புதிய இணையதளம் துவங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதாக புகார் எழுந்தன.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதை தாக்கல் செய்வதற்குள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பதாக சமூக வலைதளங்களில் பலர் புகார் தெரிவித்தனர்.இதன் காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி நாள், செப்., 30ல் இருந்து மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரிவான விளக்கம்

இதற்கிடையே இணைய தளத்தை வடிவமைத்த, 'இன்போசிஸ்' நிறுனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேசினார்.அப்போது புதிய இணையதளம் துவங்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆகியும், அதில் கோளாறுகள் தொடர்வது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.அது குறித்து சலில் பரேக், அமைச்சரிடம் விரிவான விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.