சென்னை : வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 'அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட வேண்டியது கட்டாயம்; தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், 'செப்., 1ல் பள்ளிகளை திறந்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், 'அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்' என, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். 'தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் அனைவரும், தங்களின் தடுப்பூசி சான்றிதழ்களை நாளைக்குள் தலைமை ஆசிரியர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும்' எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், பள்ளி திறப்புக்குள், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


சான்றிதழில் குளறுபடி


திருவள்ளூர் மாவட்டத்தில், சில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி சான்றிதழில், இரண்டு டோஸ்களும் ஒரே நாளில் போட்டதாக பதிவாகி உள்ளது. இதனால், இந்த சான்றிதழை பள்ளிகளில் எப்படி சமர்ப்பிக்க முடியும்; சமர்ப்பித்தாலும் ஏற்பார்களா என, ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


latest tamil newsசுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தகவல்களை பதிவேற்றம் செய்த மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. ஒரே நாளில், இரண்டு தடுப்பூசி போட்டதாக சான்றிதழ் கிடைக்கப் பெற்றவர்கள், தங்கள் தடுப்பூசி போட்ட சுகாதார நிலையங்களுக்கு சென்று தகவல் தெரிவித்தால், சான்றிதழ் திருத்தம் செய்து வழங்கப்படும்' என்றார்.