சென்னை---இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் தயாரிப்பில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

இதில், மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் படி, தரவரிசை பட்டியல் தயாரித்து, கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கப்படும்.ஒரே மாதிரியான கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரேண்டம் எண் மற்றும் மாணவர்களின் பிறந்த தேதி அடிப்படையில் தரவரிசை நிர்ணயம் செய்யப்படும். இந்த ஆண்டு தரவரிசை பட்டியல் தயாரிப்பில் புதிய விதிமுறைகளை உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதாவது ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதை முடிவு செய்ய, முதலில் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதிலும் ஒரே மதிப்பெண் என்றால் இயற்பியல் கணக்கிடப்படும். அதிலும் ஒரே மதிப்பெண் என்றால் நான்காவது விருப்ப பாட மதிப்பெண் கணக்கிடப்படும்.அதில் மாணவர்கள், ஒரே மாதிரியான மதிப்பெண் பெற்றிருந்தால் மொழி பாடங்கள் இணைந்த பிளஸ் 2 மொத்த மதிப்பெண்ணின் சதவீதத்தில் யார் அதிகமோ, அவர் தேர்வு செய்யப்படுவார். அதிலும் ஒரே மதிப்பெண் என்றால் 10ம் வகுப்பு மதிப்பெண்ணில் அதிகம் பெற்றவர் தேர்வு செய்யப்படுவார்.

அதிலும், மாணவர்கள் சமமாக இருந்தால் பிறந்த தேதி கணக்கிடப்பட்டு, மூத்தவர் முன்னுரிமை பெறுவார். அதிலும் சமமாக இருந்தால் மட்டும், ரேண்டம் எண்ணில் அதிக மதிப்புள்ள எண் உள்ளவர் தரவரிசையில் முதலிடம் பெறுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.விளையாட்டு பிரிவு சான்றிதழ் சரிபார்ப்பு இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்தவர்களில், விளையாட்டு பிரிவில் இடம் கேட்ட, 2,259 பேருக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று துவங்கியது.

சென்னை, தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லுாரிக்கு, மாணவர்கள் நேரடியாக சான்றிதழ்களுடன் வர, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. வரும், 28ம் தேதி வரை, இந்த பணிகள் நடக்கின்றன.இதற்கிடையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு பதிவு செய்யவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும், இன்று கடைசி நாள். விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தரவரிசைக்கான ரேண்டம் எண், நாளை வெளியிடப்பட உள்ளது. நேற்று மாலை வரை, 1.64 லட்சம் பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்; 1.24 லட்சம் பேர், சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.