சென்னை---அரசு பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னையை நீக்கி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:கடந்த 2010ல், அண்ணா நுாற்றாண்டு நுாலக திறப்பின் போது, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.அந்த அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மற்ற துறை துப்புரவு பணியாளர்களுக்கு, அந்தந்த துறைகள் வழியே நேரடியாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் துப்புரவு பணியாளர்களுக்கு, பல அலுவலகங்கள் வழியே நிதி மாற்றப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.

அதாவது, தொடக்கக் கல்வி இயக்குனரிடம் இருந்து உள்ளாட்சி இயக்குனருக்கு நிதி வழங்கப்பட்டு, அங்கிருந்து கலெக்டருக்கும், பின், ஊராட்சி ஒன்றிய கமிஷனருக்கும் ஊதியம் மாற்றப்படுகிறது. இறுதியாக, வட்டார கல்வி அலுவலர் வழியே மாத ஊதியம் 500 ரூபாய் மட்டும் தரப்படுகிறது.ஆனால் துப்புரவு பணியாளர்கள், காலை 7:00 முதல், பகல் 1:30 மணி வரை பணியாற்றுகின்றனர்.

பள்ளியை சுத்தம் செய்தல், மின் மோட்டார் இயக்கம், பள்ளி வளாகத்தை துாய்மை செய்தல், மதிய உணவுக்கு பின் மீண்டும் சுத்தப்படுத்துதல் என, பல பணிகளை பார்க்கின்றனர்.எனவே, முதல்வர் ஸ்டாலின், துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.