சென்னை:தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களின் விண்ணப்பங்களை, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்புவதில், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய - மாநில அரசுகள் சார்பில், ராதாகிருஷ்ணன் பெயரில், நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று, தேர்வாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

தமிழகத்தில், மாநில விருதுக்கு விண்ணப்பங்கள் நேரடியாக பெறப்படுகின்றன. ஆசிரியர்களிடம் பெற்ற விண்ணப்பங்களை இன்று மாலைக்குள், பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நடவடிக்கைவிருதுக்கான விண்ணப் பங்களை, வட்டார வள அதிகாரிகள் பெற்று, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்புவர்; அங்கிருந்து பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கும் அனுப்பப்படும்.

ஆனால், விருப்பம் உள்ள ஆசிரியர்கள் வழங்கும் விண்ணப்பங்களை, பல மாவட்டங்களில், வட்டார மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பெற தயக்கம் காட்டுவதாகவும், விண்ணப்பங்களை பெற்றாலும், அதை மேலதிகாரிக்கு அனுப்பாமல், நிலுவையில் வைத்திருப்பதாகவும் புகார் எழுந்து உள்ளது.தங்களை வந்து நேரில் சந்தித்து, மரியாதை செய்யும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களே, விருது கமிட்டி வரை செல்வதாகவும், மற்ற ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், முதல் நிலையிலேயே நின்று விடுவதாகவும், சில ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தலையிட்டு, பாரபட்சமின்றி விண்ணப்பங்களை பெற்று, விருதாளர்களை தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.