சென்னை:''அரசு பள்ளிகளை, வறுமையின் அடையாளமாக அல்லாமல், பெருமையின் அடையாளமாக உயர்த்திக்காட்டுவோம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து நேற்று விவாதம் நடந்தது.

கல்விக்கு கூடுதல் நிதி

பா.ம.க., - ஜி.கே.மணி: மாநிலம், நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் மாநிலத்தை முதலிடத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறியுள்ளீர்கள். கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்து உள்ளீர்கள். ஆனால், 10 அரசு கல்லுாரிகள் மட்டுமே துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக அரசு கல்லுாரிகளை துவங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் 32 ஆயிரத்து 599 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் 34 ஆயிரத்து 181 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. அதை விட குறைவாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வித் துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.

தி.மு.க., - கிருஷ்ணசாமி: பல அரசு பள்ளிகளின் தரம் குறைவாக உள்ளது. மாதிரி பள்ளிகளை உருவாக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளுக்கு நிதியை அதிகரித்து, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தனியார் மற்றும் மத்திய அரசின் பள்ளிகளுக்கு இணையாக, மாநில அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ்: இது, ஆறு மாதங்களுக்கான பட்ஜெட் என, நிதி அமைச்சர் ஏற்கனவே கூறியுள்ளார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, அடுத்தாண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி என்பது,அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 30 சதவீதம் வரும். இதற்கு மட்டும் 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

உறுதி

இந்த நிதியையும் சேர்த்தால், பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். கல்வித் துறைக்கு இரண்டு ஆண்டுகளில் கூடுதல் நிதி ஒதுக்குவதாக, நிதி அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக மாற்றுவதில் முதல்வர் உறுதியாக உள்ளார். எனவே அரசு பள்ளிகளை, வறுமையின் அடையாளமாக அல்லாமல், பெருமையின் அடையாளமாக உயர்த்திக் காட்டுவோம்.இவ்வாறு அமைச்சர் மகேஷ் பேசினார்.