சென்னை:பிளஸ் 2 துணைத் தேர்வுகள் முடிந்தன. வரும் 23ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது.

கொரோனா தொற்று பிரச்னையால், தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர்.பிளஸ் 2 மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் அடிப்படையில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கு மட்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 36 ஆயிரம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு, இம்மாதம் 6ம் தேதி துவங்கியது. நேற்றுடன் தேர்வுகள் முடிந்தன. இதையடுத்து 23ம் தேதி முதல் விடைத்தாள் திருத்த பணிகளை துவங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது; 28ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தப் பணிகளை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.