சென்னை:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தற்காலிக தேர்ச்சி சான்றிதழ், வரும் 23ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1-0 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படவில்லை. மாணவர்கள் அனைவரும், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆல் பாஸ் ஆன மாணவர்களுக்கு, தேர்ச்சி சான்றிதழ் மட்டும் வழங்கப்படும்; அதில் மதிப்பெண்கள் இருக்காது என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்த தேர்ச்சி சான்றிதழ், 23ம் தேதி வழங்கப்பட உள்ளது.இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு, மாணவர்களின் பிறந்த தேதி, தேர்வு எண் ஆகியவை, நாளை காலை 11:00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதை பயன்படுத்தி, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தற்காலிக தேர்ச்சி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். வரும் 23ம் தேதி முதல், 31 வரை சான்றிதழ்களை, அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.