சென்னை:'ஆன்லைன்' கல்விக்கு கம்ப்யூட்டர் வாங்குவது, திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்காக, ஆசிரியர்களுக்கு 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளும் வகையில், அரசின் சார்பில் கடன் உதவி வழங்கப்படும். இதன்படி, நடப்பு நிதியாண்டில் கடன் வழங்குவது குறித்து, பள்ளி கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் நரேஷ், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன் விபரம்:அரசின் நிதித்துறை அனுமதியின்படி, அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள், தங்களின் திருமண செலவு, கார், 'டூ - வீலர்' போன்ற வாகனங்கள் வாங்குவதற்கு, அரசின் விதிமுறைப்படி கடன்களை பெறலாம்.மேலும், ஆசிரியர்கள் தங்களின் கல்வி பயன்பாட்டுக்காக கணினி வாங்குவதற்கும், கடன் வழங்கப்படும்.

அவரவர் சம்பள விகிதத்துக்கு ஏற்ப, அதிகபட்சம் 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கான அரசாணையை ஆசிரியர்கள் பார்த்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.