latest tamil news

சென்னை-வடகிழக்கு பருவமழைக்கு முன், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளும், அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகளும் உள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கு, 2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர். வார்டு வரையறை பணிகள் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

விடுபட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்லையும், செப்டம்பர் 15க்குள் நடத்தி முடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை ஆறு மாதம் ஒத்தி வைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. கொரோனா பாதிப்பை காரணம் காட்டி, தேர்தலை தள்ளிப்போடக்கூடாது என்றும் அறிவுறுத்தியது. இதையடுத்து, தேர்தலுக்கான ஆயத்த பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

தற்போது, தேர்தலை நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்த நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமின்றி, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் இருந்து, சில அரசாணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும். வேட்பாளர்களின் தேர்தல் செலவை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்காத நிலையில், வேட்பாளர்களின் விருப்ப மனு கட்டணமும் அதிகரிக்கப்பட உள்ளதாக, தமிழக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.இதனிடையே, உள்ளாட்சி பதவிகளை குறிவைத்து, ஆளும் கட்சிக்கு தாவும் அரசியல் கட்சியினர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆள் இழுப்பு நடவடிக்கையில் ஆளும்கட்சி ஆர்வம் காட்டுவது, உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதை உறுதிப்படுத்துகிறது.