சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், மருத்துவ படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அ.தி.மு.க., அரசு அறிமுகம் செய்தது. இதனால், ஆண்டுக்கு, 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இன்ஜினியரிங், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட மற்ற தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி பல்வேறு ஆய்வுகள் நடத்தி, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இன்ஜினியரிங், சட்டம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பரில் நடக்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், இதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியாகலாம். விண்ணப்ப படிவத்தில், மாணவர்கள், ஆறாம் வகுப்பு முதல் படித்த பள்ளிகளின் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.