சேலம்:அரசு பள்ளி மாணவ - மாணவியர், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவும்படி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்படாத நிலையில், நீட் தேர்வு செப்டம்பரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.


பிளஸ் 2 மதிப்பெண், தற்காலிக சான்று நாளை வெளியிடப்படும் நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடால், அதிக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு அதிக மாணவர்கள் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.


இதையொட்டி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் பெயர் பட்டியலை, பள்ளிகளில் தயார் செய்து வருகின்றனர்.