சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரியம், நடப்பு கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள வழிமுறை, தமிழகத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், சி.பி.எஸ்.இ., அமைப்பானது, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில், இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

பாரபட்சமானது

அதாவது, கல்லுாரிகளில் இருப்பது போன்று, செமஸ்டர் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும், நவ., -- டிசம்பரில் நடத்தப்படும் தேர்வு, 50 மதிப்பெண்ணுக்கானது. பாதி அளவு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.அத்துடன், 'அப்ஜெக்டிவ்' எனப்படும், கொள்குறி வகைத் தேர்வாகவே இருக்கும் என்று தெரிகிறது. மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும், 'டெர்ம் 2' தேர்வில், இன்னொரு, 50 மதிப்பெண்ணுக்கு தேர்வு; மீதி பாதி பாடங்கள். இதில் பாடங்களின் சுமையும் குறைக்கப்படும் என்று, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

'இந்த நடைமுறை பாரபட்சமானது, தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிரானது' என்ற, விமர்சனம் எழுந்துள்ளது. 'ஒரு பக்கம் பள்ளிகளே திறக்க முடியாமல், ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளபோது, இத்தகைய உத்தியை, சி.பி.எஸ்.இ., எப்படி அறிமுகம் செய்யலாம்' எனறு, கேள்வி எழுப்பப்படுகிறது.'அந்த மாணவர்கள் மட்டும் முன்னேறி விடுவர்; நம் மாணவர்கள் பின்தங்கி விடுவர். இதைத் தான் மத்திய அரசு விரும்புகிறதா' என்றும் கேட்கப்படுகிறது.

அதோடு, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மொத்த பாடத்தையும் படிக்க வேண்டாம்; பாதி பாதியாக படித்து, தேர்வு எழுதினாலே போதுமானது.இது நியாயமா?ஆனால், தமிழகத்தில் அப்படி இல்லை. மொத்த பாடங்களையும் படித்து, முழு ஆண்டுக்கு ஆயத்தமாக வேண்டும். அது, எவ்வளவு பெரிய சுமை?மேலும், சி.பி.எஸ்.இ.,யின், இத்தகைய தேர்வு முறை என்பது, சந்தையின் தேவையை ஒட்டிச் செய்யப்படுகிறது.

நாளை மாணவர்கள், 'நீட்' உள்ளிட்ட தேசிய நுழைவு தேர்வுகளுக்கு தகுதிப்படுத்திக் கொள்வர், ஆனால், தமிழக மாணவர்கள், இதிலும் பின்னடைவையே சந்திப்பர். இது, நியாயமா என்றும் பேசுகின்றனர்.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஒருவர் கூறியதாவது:கொரோனாவிலும் வகுப்புகளை நடத்தி, தேர்வுகளை நடத்த வேண்டிய தேவை உள்ளது. கல்வி எந்தக் காரணத்திற்காகவும் நிற்கக் கூடாது. சி.பி.எஸ்.இ., இதுதொடர்பாக பல விவாதங்களை நடத்தி, இந்தத் தேர்வு முறைக்கு வந்து உள்ளது. இதன் வாயிலாக ஒரு வழி உருவாக்கப்பட்டு உள்ளது

மாணவர்களுக்கு பாடத்தின் முழுச்சுமையும், தோள் மீது சுமத்தப்படாமல், எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. விமர்சனம்இத்தனை மாதங்களாக, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின், கல்வி மற்றும் தேர்வுக்கு, ஒரு வழிமுறை உருவாக்கப்படவில்லை என்ற, விமர்சனம் வைக்கப்பட்டு வந்தது.

தற்போது, அந்த வழியைத் தான், சி.பி.எஸ்.இ., உருவாக்கியுள்ளது. இதை, மாநில கல்வி வாரியங்கள் தங்களுக்குத் தோதுப்படுமானால், அப்படியே பின்பற்றிக் கொள்ளலாமே? சி.பி.எஸ்.இ., தவறு செய்கிறது என்று, ஏன் குற்றம் சாட்டுவானேன்?இவ்வாறு அவர் கூறினார்.