சென்னை:முக்கிய பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' வழியில் நடக்கிறது. தமிழக கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின், https://tngasa.in என்ற இணையதளம் வழியே, நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும் 10ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.


விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கும் முறை குறித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பி.ஏ., தமிழ் பாடத்தில் சேர விரும்புவோருக்கு, தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையிலும்; பி.ஏ., ஆங்கிலம் சேர விரும்புவோருக்கு, ஆங்கில மதிப்பெண் அடிப்படையிலும், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.


பி.ஏ., - பி.எஸ்சி., - பி.லிட்., - பி.காம்., - பி.பி.ஏ., -பி.சி.ஏ., - பி.எஸ்.டபிள்யூ போன்ற பட்டப் படிப்புகளுக்கு, தமிழ், ஆங்கிலம் அல்லாத மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படும்.இவ்வாறு கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.