கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் விருது வழங்கும் வகையில், தமிழக நல்லாசிரியர் விருது வழங்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ல், தேசிய அளவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பணியில் சிறந்த பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.விருதுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் தனித்தனியாக விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த ஆண்டுக்கான மத்திய அரசு விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை நடந்து வருகிறது.


மாநில அளவிலான விருதுக்கு, விரைவில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. இதற்கான விதிகளில் ஆண்டு தோறும் சில மாற்றங்கள் செய்யப்படும். இந்நிலையில், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் திருத்தம் செய்துஉள்ளனர். இதன்படி, விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களின் தகுதியில், கொரோனா கால சேவையும் கட்டாயமாகி உள்ளது. கடந்தாண்டு கொரோனா தொற்று பரவிய முதல் அலையின்போதும்,


அதன் பிறகும், அரசு உத்தரவுப்படி தவறாமல் வேலைக்கு வந்தவர்கள், கொரோனா தன்னார்வ பணிகளில் ஈடுபட்டவர்கள். கொரோனா காலத்தில் கல்வி 'டிவி' மற்றும் பல்வேறு ஆன்லைன் வழிகளில், பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே விருதை பெற முடியும் என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.