மதுரை : அரசு பள்ளிகளிலுள்ள 'ஹைடெக்' ஆய்வகங்களில் ஏற்பட்ட தொழில் நுட்ப பிரச்னைகளை சரி செய்ய அதிகாரிகள் வற்புறுத்துவதால் தலைமையாசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசு நிதியுடன் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் 6029 ைஹடெக் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது பள்ளிகள் மூடியுள்ள நிலையில் ஆய்வகங்களை பராமரித்து இயங்கும் நிலையில் வைத்திருக்க கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டார். இதன்படி ஆய்வகங்களில் தொழில் நுட்ப பிரச்னைகளை சரிசெய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகள் மூடியுள்ள நிலையில் ஆய்வகங்கள் பராமரிக்கப்படவில்லை. ஒரு ஆய்வகத்தில் 20 கம்ப்யூட்டர்கள், பேட்டரிகள், மோடம், புரொஜெக்டர் உள்ளிட்டவை உள்ளன. இவற்றில் மாஜி முதல்வர் படம் உள்ளது. தற்போது அப்படம் நீக்கப்பட்டு தமிழக அரசு முத்திரை இடம் பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான உபகரணங்கள் தரமில்லாதவை. அதை பழுதுநீக்க டெக்னீஷியன்கள் வருவதில்லை. தலைமையாசிரியரே செலவு செய்து பழுதுநீக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர், என்றனர்.