சென்னை:''நீட் தேர்வு தாக்கம் குறித்து உயர்நிலை குழுவின் 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டன'' என ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் கூறினார்.

தமிழகத்தில் 'நீட்' நுழைவு தேர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பொது மக்களிடம் நீட் தேர்வு குறித்த கருத்துகளை கேட்டறிந்தனர். அதன்படி 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் உயர்நிலை குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி வளாகத்தில் நடந்தது.

பின் நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த பேட்டி:'நீட்' தேர்வுக்கு எதிராக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கான பாதிப்பு இருக்கிறது.உயர்நிலை குழுவின் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று விட்டன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடித்து அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடையும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கு முடிந்தப் பின் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.