சென்னை : இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில், தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கல்வி கட்டணம் 500 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஐந்து முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் அளித்து, இலவச கல்வி வழங்க வேண்டும். அதற்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசே மாநில அரசுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் இந்த சட்டத்தின்படி, மூன்றரை வயது முடிந்த குழந்தைகள், எல்.கே.ஜி.,யில் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் விதிப்படி, ஐந்து வயதான குழந்தைகள் தான், ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.எனவே, தமிழக அரசின் நடைமுறை, இந்த விதிகளுக்கு முரணாக இருப்பதால், இலவச சேர்க்கைக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசிடம் தமிழகம் பெறுவதில்லை.


மாநில அரசின் நிதியில் இருந்தே, பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்தி வருகிறது.இந்த வகையில், இரண்டு ஆண்டுகளாக, தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, அரசு வழங்க வேண்டிய கல்வி கட்டண தொகை பாக்கி 500 கோடி ரூபாயை எட்டியுள்ளது.தமிழக அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ளதால், இந்த தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கை பணிகள், நேற்று முதல் துவங்கிஉள்ளன. இதையடுத்து, முந்தைய ஆண்டுகளுக்கான கல்வி கட்டண பாக்கியை, அரசு வழங்குமாறு பள்ளி நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க செயலர் நந்தகுமார் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.