சென்னை:தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை, இன்னும் ஒரு வாரத்தில் வழங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கொரோனா பரவல் பிரச்னையால், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் வழங்க கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி, பல்வேறு மதிப்பெண் திட்டங்களை வகுத்து, முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தது. அதில் ஒரு திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார். அதன்படி, 10ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதம்; பிளஸ் 1ல் இருந்து, 20 சதவீதம் மற்றும், பிளஸ் 2 செய்முறை தேர்வில் இருந்து 30 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வின் மதிப்பெண் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு தேர்வு துறையில் மதிப்பெண் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.ஆக., 1 முதல் கல்லுாரி மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது.

ஜூலை 31க்குள் மதிப்பெண் பட்டியலை வழங்க, உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனவே, இன்னும் ஒரு வாரம் அல்லது ௧௦ நாட்களுக்குள், பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை, பள்ளி கல்வித்துறை வெளியிடும் என தெரிகிறது.