புதுடில்லி :''ஜே.இ.இ., பிரதான நுழைவுத் தேர்வுகள், ஜூலை 20 - 25 மற்றும் ஜூலை 27 - ஆக., 2ம் தேதி வரையிலும் நடத்தப்படும்,'' என, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவித்துள்ளார்.ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக, ஜே.இ.இ.,பிரதான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


இந்த தேர்வுகளை இந்த ஆண்டு முதல், பிப்., மார்ச், ஏப்., மே ஆகிய மாதங்களில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்தது. இதன்படி, பிப்., மற்றும் மார்ச்சில் ஜே.இ.இ., மெயின் தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.ஏப்., மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்த நிலையில், மீதமுள்ள தேர்வுகளை நடத்துவது பற்றி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நேற்று கூறியதாவது:மூன்றாவது ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு வரும், 20 - 25ம் தேதி வரை நடத்தப்படும். நான்காவது தேர்வு, வரும் 27 - ஆக., 2ம் தேதி வரை நடத்தப்படும்.

தேர்வு மையங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படும். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட தடுப்பு சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த இரண்டு தேர்வுகளுக்கான முடிவுகளும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.