சென்னை:அரசின் வழிகாட்டுதல் முறைப்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை, பள்ளி அளவில் சரிபார்த்து, தேர்வு துறைக்கு அனுப்புமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சுழற்சி முறை

தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.அதன்படி, 10ம் வகுப்பில், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரியில் இருந்து, 50 சதவீத மதிப்பெண்கள், பிளஸ் 2வில் சேர்க்கப்படுகின்றன.பிளஸ் 1 எழுத்து தேர்வில் இருந்து, 20 சதவீத மதிப்பெண்களும், அகமதிப்பீடாக, 30 மதிப்பெண்களும், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் இடம்பெற உள்ளன.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், சுழற்சி முறையில் பணிக்கு வரவழைக்கப்பட்டு, மதிப்பெண் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.வெளியிட முடிவுஅதாவது, பிளஸ் 1 சேர்க்கையின் போது மாணவர்கள் வழங்கிய, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 1 பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பள்ளிகளின் செய்முறை தேர்வில் வழங்கிய மதிப்பெண்கள் ஆகியவற்றை சரிபார்த்து, பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள மதிப்பெண்ணும், அரசு தேர்வு துறையில் உள்ள மதிப்பெண்ணும் சரியாக உள்ளனவா என, சரிபார்த்த பின், அனைத்து மாணவர்களுக்குமான பட்டியலை, தேர்வு துறை இணையதளத்தில் வெளியிட, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.