புதுடில்லி : 'பல்கலை மற்றும் கல்லுாரிகளில் புதிய கல்வி ஆண்டு, அக்., 1ம் தேதி முதல் துவங்கப்படும்' என, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும் புதிய கல்வி ஆண்டு அக்., 1ம் தேதி முதல் துவங்கும். அதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள், செப்., 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., மற்றும் இதர மாநில கல்வி வாரியங்களும் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின்பே, இளநிலை பட்டப் படிப்பிற்கான சேர்க்கை நடைமுறைகள் துவங்கப்பட வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 31ம் தேதிக்குள் வெளியிடப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் வெளியாக தாமதமானால், புதிய கல்வி ஆண்டு, அக்., 18ம் தேதி முதல் துவங்கப் படும். மாணவர்களுக்கான வகுப்புகளை 'ஆன்லைன்' வாயிலாகவும் நடத்த லாம் அல்லது மாணவர்களை கல்லுாரிகளுக்கு அழைத்தும் நடத்தலாம்.அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளும், தற்போதைய இறுதி ஆண்டு மற்றும் கடைசிக் கால தேர்வுகளை ஆக., 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாகவும் அந்த தேர்வுகளை நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.