சென்னை:'பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், நாளை மறுதினம் வெளியிடப்படும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

வரும் 22ம் தேதி, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.கொரோனா பரவல் காரணமாக, தமிழக பாடத் திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு இன்றி, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, அரசின் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டு, வழிகாட்டு முறை வெளியிடப்பட்டது.

பிளஸ் 2 செய்முறை தேர்வில், 30 மதிப்பெண்; பிளஸ் 1 பொது தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில், 20 சதவீதம்; 10ம் வகுப்பில் அதிகபட்சம் பெறப்பட்ட மூன்று பாடங்களின் மதிப்பெண்களின் சராசரியில், 50 சதவீதம் ஆகியவற்றை சேர்த்து, பிளஸ் 2 மதிப்பெண் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதற்கான அரசாணை, மூன்று நாட்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மதிப்பெண் பட்டியல் தயாராக இருப்பதாக, முதல்வரிடம், பள்ளி கல்வித் துறை சார்பில், நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.மதிப்பெண் விபரத்தை வெளியிட, முதல்வர் அலுவலகத்தில் இருந்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நாளை மறுதினம் மதிப்பெண் விபரம் வெளியாகும் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அறிவித்தார்.இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள், நாளை மறுதினம் காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படும். பள்ளி மாணவர்கள், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை, அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து, மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள், www.tnresults.nic.in/, www.dge1.tn.nic.in/, www.dge2.tn.nic.in/ www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில், மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.மேலும், மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரம் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்.

மதிப்பெண் பட்டியலை, www.dge.tn.gov.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில், வரும் 22ம் தேதி காலை, 11:00 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுக்கான பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்த பின்னரே, மதிப்பெண் பட்டியலை 'டவுண்லோடு' செய்ய முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.