சென்னை:ஆசிரியர் பணிக்கு படிக்கும் பி.எட்., மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழி செய்முறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு முடித்து ஆசிரியர் பணிக்கு வருவோர், கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., படிக்கின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தி, செய்முறை பயிற்சி வழங்கப்படும். மேலும், பள்ளிகளில் இருந்து மாணவ - மாணவியரின் கற்பித்தல் திறன் தொடர்பாக மதிப்பெண் வழங்கப்படும்.அதன்பின், நேரடியாக செய்முறை தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த ஆண்டு கொரோனா பிரச்னையால், செய்முறை தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 12 முதல் 17ம் தேதி வரை ஆன்லைன் வழியில், அந்தந்த கல்லுாரிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


மாணவ - மாணவியரின் கற்பித்தல் திறன் மற்றும் செய்முறை பதிவேடுகள் தொடர்பாக கேள்வி கேட்டு, மதிப்பெண் வழங்கப்படும். 90 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் பெறுவோருக்கு, பல்கலை வளாகத்தில் மறுதேர்வு நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்ணே இறுதி செய்யப்படும் என, ஆசிரியர் பல்கலை அறிவித்துள்ளது.