சென்னை : 'நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவு தேர்வு, செப்டம்பர் 12ல் நடத்தப்படும்' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்; இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவ படிப்புகள் மற்றும் பி.எஸ்சி., நர்சிங் போன்றவற்றில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மே முதல் வாரத்தில் இந்த தேர்வு நடத்தப்படும்.


இந்த ஆண்டு, கொரோனா இரண்டாம் அலையால் தேர்வு தள்ளிப் போனது. இந்நிலையில், 'செப்., 12ல், நாடு முழுதும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படும்' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார். தேர்வில் பங்கேற்க, ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை, 5:00 மணிக்கு துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.அவரது அறிவிப்பு: கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், சமூக இடைவெளியை பின்பற்றி நீட் தேர்வு நடக்கும். இதற்காக தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை, 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்படும். கடந்த ஆண்டில், 3,862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரிக்கும்.


தேர்வுக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் முக கவசம் வழங்கப்படும். தேர்வு மையத்தில் நுழையவும், வெளியேறவும் நெரிசல் ஏற்படாத வகையில், பல்வேறு வகை நேர அட்டவணை பின்பற்றப்படும்.கொரோனா வழிகாட்டலை பின்பற்றி, எந்த ஒரு தொடர்பும் ஏற்படாத பதிவு முறை, தேர்வு மையங்களில் முறையான கிருமி நீக்கம், சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கை அமைப்பு போன்றவையும் நீட் தேர்வில் உறுதி செய்யப்படும். கூடுதல் விபரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 'தயாராக வேண்டும்'''நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.


அவர் அளித்த பேட்டி:மருத்துவ மாணவர் படிப்புக்கான நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட, ஏ.கே.ராஜன் உயர்நிலை குழுவுக்கு எதிரான வழக்கு, இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பின், மாநில அரசு முடிவெடுக்கும். தமிழக அரசை பொறுத்தவரை, நீட் தேர்வு வேண்டாம் என்பதே நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்கிறோம். தமிழக அரசு, நீட் தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறது. நிச்சயம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். ஒருவேளை நீட் தேர்வு எழுத வேண்டும் என வந்து விட்டால், மாணவர்கள் பாதிக்கக் கூடாது. எனவே, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.