சென்னை :தமிழக கல்லுாரிகளில், ஆகஸ்ட் 1 முதல், மாணவர் சேர்க்கை துவக்கப்பட உள்ளது. அனைத்து பல்கலைகளும், ஒரே மாதிரியான கால அட்டவணை வெளியிட்டு, ஒரே காலகட்டத்தில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைமுறைகளும், ஆகஸ்டில் துவங்கப்படும் என்றும், அனைத்து பல்கலைகளிலும், எம்.பில்., படிப்பு வழக்கம் போல நடத்தப்படும் என்றும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.அரசு பல்கலைகளின் துணை வேந்தர்களுடன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர் கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், பல்கலைகளின் பணி நியமனங்கள், காலியிடங்கள் விபரம், மாணவர் சேர்க்கை, சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம், அடிப்படை வசதிகள் மற்றும் அதற்கான 'டெண்டர்' உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனைநடத்தப்பட்டது.ஆலோசனைகள்மாநிலம் முழுதும் அனைத்து பல்கலைகளும், ஒரே கால கட்டத்தில், மாணவர் சேர்க்கையை அறிவித்து, 'ஆன்லைன்' வழியில் நடத்த வேண்டும். அதில் குளறுபடிகள் இருக்கக் கூடாது என, துணை வேந்தர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.பின், அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலை துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. உயர் கல்வித் துறையில், பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையை மாற்றி, அனைத்து பல்கலைகளும் வெளிப்படை தன்மையுடன் இயங்க வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்களில், அனைத்து பல்கலைகளும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும்.நீதிமன்றம் கூறியது போல், எந்த தலையீடுமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவது முக்கியம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கால அட்டவணைசென்னை பல்கலையில், எம்.பில்., படிப்பை எடுத்து விட்டதாக செய்திகள் வந்துள்ளன. எம்.பில்., வேண்டுமா, வேண்டாமா என்பதில், இரு வேறுபட்ட கருத்துகள் உள்ளன.அதேநேரம், எல்லா பல்கலைகள் சார்பிலும், எம்.பில்., படிப்பை நடத்த வேண்டும் என, துணை வேந்தர்களிடம் கூறப்பட்டுள்ளது.எம்.பில்., படிப்பில் சேர்வதா, வேண்டாமா என்பதை, மாணவர்களின் விருப்பப்படி முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், எம்.பில்., படிப்பு தொடர்ந்து நடத்தப்படும்.தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளில், ஆக., 1 முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.


இதற்கு, அனைத்து பல்கலைகளும், ஒரே மாதிரியான கால அட்டவணை வெளியிட்டு, ஒரே காலகட்டத்தில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும். அதற்குள், செமஸ்டர் தேர்வு முடிவுகளை பல்கலைகள் அறிவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசின் வழிகாட்டுதலின்படி, பிளஸ் 2 மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், ஆக., 1 முதல், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கும். சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வரும் 31ம் தேதிக்குள் மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இன்ஜினியரிங் படிப்புகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஒற்றை சாளர முறையில், 'ஆன்லைன்' வழியில் நடத்தப்படும். கடந்த ஆண்டை போல், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் கவுன்சிலிங் நடக்கும்.மூன்று பல்கலைகளில், பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து, உயர் கல்வித்துறை இணை செயலர் தலைமையில், விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.