கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து கே.வி., சங்கதன் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு:நாடு முழுதும் உள்ள கே.வி., பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கனவே விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கு உரிய விதிகளின்படி, தகுதி பெற்றவர்களின் முதல் பட்டியல் வரும், 23ம் தேதி வெளியிடப்படும்.இரண்டாவது பட்டியல் ஜூன் 30; மூன்றாவது பட்டியல் ஜூலை 5ல் வெளியிடப்படும். 


முன்னுரிமை அடிப்படையில் உள்ளவர்களுக்கான பட்டியல் ஜூலை 2ல் வெளியாகும். இவற்றில் மாணவர்கள் சேராமல் காலியாகும் இடங்களுக்கு, ஜூலை 8 முதல், 12 வரை விண்ணப்ப பதிவுகள் நடக்கும்.ஜூலை 13 முதல், 16க்குள் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.


இரண்டாம் வகுப்புக்கு, ஜூன் 24ல் பட்டியல் வெளியாகும். ஜூன் 25 முதல், 30க்குள் மாணவர் சேர்க்கை நடக்கும்.பிளஸ் 1 தவிர, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலியான இடங்களில் ஆக., 31க்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்படும்.பிளஸ் 1க்கு, 10ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட 10 நாட்களில் பதிவுகள் துவங்கி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.